search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகையர் திலகம் விமர்சனம்"

    கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் விமர்சனம். #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் நடிகையர் திலகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தைரியத்துடனும், துடிப்புடனும் வாழ்கிறார். தன்னால் சாதிக்க முடியாது என்று சொல்பவர்களிடம் சாதித்து காட்டுகிறார்.

    ஜெமினி கணேசன் எடுத்த புகைப்படம் ஒன்று நாளிதழில் வர, அதன் மூலம் சாவித்திரிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி முன்னேறினார்? அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார்கள்.

    இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.



    தந்தையில்லாத சுட்டிப்பெண்ணாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப்போட்டு, பின்னர் பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த சாவித்திரியை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திக் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு ஒரு மணிமகுடம். கீர்த்தியுடன் போட்டி போட்டு நடித்துள்ள துல்கர் சல்மான்,  ஜெமினி கணேசனாகவே மாறியிருக்கிறார்.

    சமந்தா, விஜயதேவரகொண்டா, நாகசைதன்யா, மோகன் பாபு என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 1940 முதல் 1980 வரையில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்தந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டி செல்கின்றது டேனியின் கேமராவும் ஷிவம் மற்றும் அவினாஷின் கலை இயக்கமும். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் மிக்கி மேயரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.



    எல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் திறமையான இயக்கத்தாலும் நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர் நாக் அஷ்வின். மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகின்றன.



    சமந்தா, விஜய தேவரகொண்டா தேடல் மூலம் நமக்கு சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்குவது சிறப்பு. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் காதல் காட்சிகளையும் இணைத்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.

    மொத்தத்தில் ‘நடிகையர் திலகம்’ சிறந்த பொக்கிஷம்.
    ×